Advertisment

'தி.மு.க மீதான குற்றச்சாட்டை பா. ரஞ்சித் வாபஸ் பெறுவார்': போஸ் வெங்கட் கருத்து

இயக்குனர் பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்த வேதணையில் தெரிவித்தவைகளாக எடுத்துக்கொள்கிறேன் என்றும் மற்றபடி தி.மு.க மீதான குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெறுவார் என நம்புவதாக நடிகரும், தி.மு.க பேச்சாளருமான போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
bose venkat ranjith

இயக்குனர் பா.ரஞ்சித் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்த வேதணையில் தெரிவித்தவைகளாக எடுத்துக்கொள்கிறேன் என்றும் மற்றபடி தி.மு.க மீதான குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெறுவார் என நம்புவதாக நடிகரும், தி.மு.க பேச்சாளருமான போஸ் வெங்கட் கூறியுள்ளார். 

Advertisment

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஜூலை 5-ம் தேதி அவரது வீட்டுக்கு வெளியே 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ்நாட்டில் முக்கியமான தலித் தலைவர்களில் ஒருவரான ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டு அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவரது கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் பா. ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கே நேரில் வந்து கதறி அழுதார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தலித் தலைவர்கள் திருமாவளவன், பூவை. ஜெகன் மூர்த்தி, சிவகாமி ஐ.ஏ.எஸ், குடந்தை அரசன், செல்வப்பெருந்தகை, நாகை திருவள்ளுவன், அரசியல் இயக்கத் தலைவர்கள் சுப. உதயகுமாரன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அவரது மனைவி அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார். அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஹத்ராஸ் நெரிசல் பலிகளைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னைக்கு நகரத்துக்கு வெளியே உத்தரவுப்படி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள ரோஜா நகரில் அடக்கம் செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து, தி.மு.க மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்? 

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். 

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?

7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 

முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை) வழிநடத்தும்.
ஜெய்பீம்!” என்று தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் தி.மு.க மீது வைத்த இத்தகைய குற்றசாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நடிகரும் தி.மு.க பேச்சாளருமான போஸ் வெங்கட், இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்த கருத்துகள் அண்ணனை இழந்த வேதனையில் கூறியதாக எடுத்துக்கொள்கிறேன், தி.மு.க மீது வைத்த குற்றச்சாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என கூறியுள்ளார். 

இது குறித்து போஸ் வெங்கட் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதணையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன். மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment