இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசன் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்.27) இரவு 9 மணியளவில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் மற்றும் கற்கள் வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. சம்பவம் குறித்து மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மதுபோதையில், காவலாளியுடன் தகராறு செய்தபடி கற்கள், காலி மதுபாட்டில்களை சிபிஐ அலுவலகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர், இந்த வழக்கில் தற்போது 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் குறித்து சிவா கூறுகையில், "கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான வெறுப்பால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறையினர் 24 மணி நேரமும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அலுவலகப் பெண் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது திடீர் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“