பாக்ஸர் முரளி கொலை விவகாரம்: இரண்டு சிறைத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

கைதி பாக்ஸர் முரளி கொலையில், இரண்டு சிறைத் துறை அதிகாரிகள் சஸ்பென்ட்

சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாக்ஸர் முரளி என்ற கைதி நேற்று முன்தினம், சக கைதிகளாக் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இரண்டு சிறைத் துறை அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாக்ஸர் முரளி என்ற கைதி, சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றுமுன்தினம், (ஜூன் 20) புழல் சிறையில் காலை உணவு வழங்கப்பட்ட பின்னர் அனைத்து கைதிகளும் அவரவர் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கழிவறை பக்கமாகச் சென்று கொண்டிருந்த பாக்ஸர் முரளியை, சக கைதிகளான சரண்ராஜ், ஜோசப், ரமேஷ், கார்த்தி, பிரதீப் குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர் கழிவறையில் தயாராக வைத்திருந்த தகரத்தை எடுத்து, முரளியின் கழுத்தையும், பிறப்புறுப்பையும் அறுத்தனர். உடனே சக கைதிகள் சத்தம்போடவே, சிறைக்காவலர்கள் விரைந்து வந்து, முரளியை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முரளியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறைக்குள்ளே கைதி சக கைதிகளால் கொல்லப்பட்டது குறித்து புழல் சிறைச்சாலை ஜெயிலர் அளித்த புகாரின்பேரில், புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி முருகேசன் ஆகியோர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு பணியிலிருந்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் பாக்ஸர் முரளி கொலையானதை அடுத்து இரண்டு சிறைத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை வாடர்ன் நாகராஜன், சிறை ஊழியர் பழனிவேல் ஆகிய இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

×Close
×Close