திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் தாக்கப்பட்டது உறுதியானதை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ் – அகிலா தம்பதின் மகன் மகன் மனோஜ்குமார் (14). 7-ம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுவன் மனோஜ்குமார் பள்ளிக்கூடம் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவருடைய தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதி சேர்த்துள்ளார்.
மனோஜ்குமார் பிப்ரவரி 1-ம் தேதி இரவு கழிவறைக்கு சென்ற போது மயக்கம் போட்டு விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர்கள், தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் போதை மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழிவறையில் வைத்து சிறுவனை கட்டையால் தாக்கியதில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து, போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“