scorecardresearch

பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்; 10-ம் வகுப்பு மாணவன் பலி; உறவினர்கள் சாலை மறியல்

முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trichy news, Musiri news, Tiruchirappalli distirct, latest tamil news, Tamilnadu news

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மவுலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மாணவன் மவுலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மெளலீஸ்வரனை சில மாணவர்கள் தள்ளி விட்டதில் பின் தலையில் அடிபட்டு சுய நினைவு இழந்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெளலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.

மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திருச்சி – நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டி.எஸ்.பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மாணவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணியில் அலட்சிய போக்காக இருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவனின் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சாலை மறியலால் தொட்டியம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Boys clash in school 10th standard boy killed