பிராமணர்கள் சமூகம் மீதான அவதூறு பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க கோரியும் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில்
சென்னையில் நவம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தி பேசுதல், பூணூல் அறுத்தல் உள்ளிட்டவைகளைத் தடுக்க தலித்துகளுக்கு பாதுகாப்பு தரக் கூடிய பி.சி.ஆர் சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்ம், பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், நடிகை கஸ்தூரி, பாஜக மதுவந்தி, வேலூர் இப்ராஹிம், காங்கிரஸ் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க-வினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 27-ம் தேதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
*முற்பட்ட சமுதாயத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்
*அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், தக்கார் நியமனத்தில் பிராமண சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
*டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு தேர்வுகள், வேலை வாய்ப்புகளில், முற்பட்ட சமூகத்தினருக்கான வயது வரம்பை, 32லிருந்து 35 ஆக உயர்த்த வேண்டும்
*ஊடகம், பத்திரிகைகளில், பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை, மத நம்பிக்கையை இழிவு படுத்துபவர்கள் மீது, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடை செய்ய வேண்டும்
*தமிழக தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டு, நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மறைந்த ஆர்.வெங்கட்ராமனின் நுாற்றாண்டு விழா நினைவாக, அம்பத்துார் கிண்டி தொழிற்பேட்டையில் திருஉருவச்சிலை நிறுவ வேண்டும்
*கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ-வும், பொது நல சேவகரும், பிராமணர் சங்க நிறுவனர்களில் ஒருவருமான, காசிராமன் நினைவை முன்னிட்டு, அவரின் உருவச்சிலையை கும்பகோணத்தில் நிறுவ அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.