க.சண்முகவடிவேல்
Trichy Government Hospital Tamil News: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில் மேம்பட்ட மார்பக ஊடுகதிர் பரிசோதனை எந்திரம், டிஜிட்டல் புளூரோஸ்கோபி எந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் எந்திரம் என ரூ.3.70 கோடி மதிப்பிலான 4 அதிநவீன கதிரியக்க எந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த அதிநவீன எந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்காகவும், மருத்துவ சேவைக்காகவும் அர்ப்பணித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:- திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை இருந்த மார்பக புற்றுநோய் கண்டறியும் எந்திரத்தின் வாயிலாக 5 மி.மீ. வரை இருந்தால் மட்டுமே பாதிப்பு தெரியும். இந்த புதிய நவீன எந்திரத்தில் 1 மி.மீ. அளவுக்கு இருந்தாலும் தெரிந்துவிடும்.
மேலும், அதிநவீன எக்ஸ்ரே கருவிகளையும் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் இந்த நுண் கதிரியல் துறைக்கு வழங்கி உள்ளார்கள். திருச்சியில் மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். மற்ற மாவட்டங்களை விட திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். ஆட்சியர் பிரதீப் குமார் இரவு 1 மணிக்கு முக்கொம்பு அணைக்கு சென்று அதிகாலை 2 மணி வரை அங்கே இருந்து ஊரக உள்ளாட்சி அதிகாரிகள், தாலுகா அதிகாரிகள், காவல்துறையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் வழங்கி உள்ளார் என்றார்.
ஆட்சியர் பிரதீப் குமார் பேசும்போது, இப்போது முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் ஜேடர்பாளையம் அணைக்கு வந்துவிட்டது. தண்ணீர் வேகமாக வருவதால் ஐந்து, ஆறு மணி நேரத்தில் அந்த தண்ணீர் அணைக்கு வந்து விடும்.
கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம். தண்ணீரின் மேற்பகுதியை பார்க்கும் போது நீரோட்டம் இல்லாதது போன்று இருக்கும். ஆனால் அடியில் மிக மிக வேகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும். எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்தியநாதன், அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.த.நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil