/indian-express-tamil/media/media_files/SL8XwtqXOZG2NdENbLm5.jpg)
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் சமூக நீதியும், தாய்மொழியில் இலவசக் கல்வியும் வழங்கப்பட்டு வந்தது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தெரிவித்தார். மேலும் ஆங்கிலேயர்கள் நமது தாய்மொழி கல்வியை திட்டமிட்டு அழித்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜெகநாத் எழுதிய, "மெட்ராஸின் முதல் பூர்வீக குரல்: காஜுலு லக்ஷ்மிநரசு ஷெட்டி" என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார்.
இதன் பின் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, "நன்மையாகக் கருதப்பட்ட ஆசிரியர் தொழில் இனி வணிகமாக இல்லை. பிராமணர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாக இருந்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்தப் பிராமணர்கள்தான் கல்வி கற்பித்தார்கள். இந்தக் கல்வி முறை ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
1823-ம் ஆண்டு முதல் மதராஸ் மாகாணத்தில் சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடு இல்லாமல் கல்வி கற்பிக்கப்பட்டது. தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தனித்தனியாகவும், அவரவர் வசதிக்கேற்பவும் செயல்பட்டன. 1820களில், நமது சமூகத்தில் கல்வி மாணவர்களுக்கு இலவசமாக இருந்தது.
ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு தாய்மொழி கல்வி நிறுவனங்களில் பிராமணர்களை விட சூத்திரர்கள் அதிகம் படித்திருந்தனர் என்று ஆர்.என்.ரவி கூறினார்.
தொடர்ந்து, வள்ளலாரைப் பாராட்டிப் பேசிய ரவி, ஆங்கிலேயர்கள் தாய்மொழிக் கல்வி முறையை அழித்தபோது, வள்ளலார் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி தாய்மொழிக் கல்வியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.