Broadcasting Ministry issues notice to Zee Tamil: பிரதமர் மோடியை கலாய்க்கும் விதமாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது குறித்து விளக்கம் அளிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் சேனலில், குழந்தைகள் மட்டும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோ ஒன்றில், மோடி அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கலாய்த்து, சிறுவர்கள் நாடகம் ஒன்று நடித்தனர்.
அதில் ஒரு சிறுவன், வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசுகிறான். நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? இந்த கருப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாது என சொல்லப்போகிறேன். அப்படி செய்ஞ்சா கருப்பு பணம் ஒழிஞ்சிடும்ல என்று பேசுகிறான்.
அதற்கு அமைச்சர் வேஷமிட்ட மற்றொரு சிறுவன்: இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு என்று கூறுகிறான்.
மேலும் அமைச்சர் வேடமிட்ட சிறுவன்: லாபத்தில் உள்ளதையும் ஏன் விற்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு மன்னன்; என்ன அமைச்சு! நீங்களும் மக்களே போலவே கேள்வி கேட்கறீர்கள்! நஷ்டத்தில் உள்ளதை வித்தால் நாம் எப்படி லாபம் பார்க்க முடியும். லாபத்தில் உள்ளதை விற்றால் தானே நாம் லாபம் பார்க்க முடியும் என்று கூறுகிறான்.
சிறுவர்களின் இந்த நாடகம் சோஷியல் மீடியாவில் ஒரு பக்கம் வைரலாக பரவி வந்தாலும், மோடி ஆதரவாளர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது.
குறிப்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து ட்வீட் செய்தார். அதில், ”ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணை அமைச்சர் திரு முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், ஜீ தமிழ் சேனலுக்கு நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், 15.01.2022 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிராக இந்த அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். புகாரின் சாரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் இந்த அமைச்சகத்திடம் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சகம் ஜீ தமிழ் சேனல் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-17-at-19.25.01.jpeg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil