திருச்சி மாத்தூர் அருகே அண்ணன் தங்கையிடையே மொபைல் போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் இருவரும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்திரைகுமார் - ஜீவிதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் இருந்தனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது அவர்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் தங்கை பவித்ராவின் செல்போனை அண்ணன் மணிகண்டன் உடைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
தங்கையை காப்பாற்ற அண்ணன் மணிகண்டனும் கிணற்றில் குதித்த நிலையில், நீச்சல் தெரியாததால் இருவரும் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து மீட்கும் போது பிரேதமாகவே மீட்கப்பட்டது.
உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மண்டையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்