சொத்துக்காக சகோதரன் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கொடூரம்!!!

சொத்து பிரச்சனையில் தம்பியின் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை புதரில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையை செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மேலாளவந்த்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜசேகர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் 25 வயதான எஸ்தருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் சர்வன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

ராஜசேகர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்ததால் எஸ்தர் தனது 2 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 6 தேதியில் இருந்து காணாமல் போனது அவரின் குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜசேகரின் அண்ணன் மற்றும் விவசாயி நெல்சனிடம் எஸ்தர் குடும்பத்தினர் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் எஸ்தர் கணவர் ராஜேசேகரிடம் தெரிவித்தனர். விவரம் அறிந்து அவர் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மேலாளவந்த்சேரி வந்தார். பின்னர் ராஜசேகர் மற்றும் பெண் குடும்பத்தினர் இணைந்து போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் ராஜசேகரின் அண்ணன் நெல்சன் தான் எஸ்தரை கொலை செய்தார் என்று தெரியவந்தது.

எனவே இந்தக் கொலை குறித்த விசாரணை நடந்தபோது, நெல்சன் எஸ்தரை கொலை செய்து பின்னர் அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டையில் கட்டியதாகவும், பின்னர் அதனைப் புதரில் வீசியதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்தனர்.

பிறகு நெல்சனை போலீசார் அவர் குறிப்பிட்ட புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சோதனை செய்ததில் இரண்டு சாக்குப் பைகளில் எஸ்தரின் உடல் துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் அதனைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிபியின் மனைவியையே சொத்துக்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close