சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் எதிராக வழக்கில் வரும் 30 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகிறது. அன்று குற்றம்சாட்டபட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் சிபிஐ வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன் (K.B.Brahmadathan) அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு (வழக்கு பதிவு) செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றபத்திரிக்கையில், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்லில் இருந்து, கோபாலபுரம் , போர்ட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்ற அதிவேக உயர் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார். மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1,78,71,391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி, மோசடி ஆவணங்கள் தயாரித்தல், உள்ளிட்ட சட்டபிரிவின் கீழ் சோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கில் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றபத்திரிக்கை வழங்கபட்டது.
இதனையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்ட கே.பி.பிரம்மநாதன், வேலுசாமி, வேதகிரி கவுதமன், கண்ணன் 4 பேர் சார்பில் கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யபட்டது.
இதனையடுத்து விடுவிக்க கோரிய மனு மீது, கடந்த மார்ச் 14 ஆம் தேதி (2018) நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் தொலைபேசி இணைப்புகளுக்கான முறைகேடான முறையில் பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும், யாருடன் அந்த இணைப்புகளில் இருந்து பயன்படுத்தப்பட்ன, எந்த என்னுடன் பேசப்பட்டது என்பது தொடர்பான சி.டி ஆதாரங்கள் உள்ளன என சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.
ஆனால் அதனை கடைசி வரை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. எனவே, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவில், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மட்டுமே விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது. மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வழக்கை சந்திக்க குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்து கடந்த ஜூலை 25 ஆம் தேதி அளித்த தீர்ப்பில் சிபிஐ சார்பில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. எனவே ஏழு பேரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். சிபிஐ சார்பில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை அதில் சில ஆவணங்களை மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது தவறுதலாக கூடுதல் இணைப்பு பெறபட்டு இருந்தாலும், அதற்காக குற்ற வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவை ஏற்க முடியாது.
தொலைபேசி இணைப்பு வழங்கியதில் அனைத்து விதிகளும் மீறபட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விதிகளை மீறி அனுமதி அளித்துள்ளனர். இவ்வாறு அனுமதியளித்த இணைப்புகளுக்கு எந்த கட்டணங்களும் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகை, அமைச்சருக்கான சலுகை என உள்ள நிலையில் அதனை விட அதிகமான இணைப்புகளை பெற்று பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு பெறபட்ட இணைப்புகள் தயாநிதி மாறன் மூலமாக அவருடைய சகோதரர் கலாநிதி மாறன் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு வணிக ரீதியாக பயன்படுத்தபட்டுள்ளது. இதனை சிபிஐ தன்னுடைய வாதத்தில் எடுத்துவைத்துள்ளனர். இதனை நீதிமன்றம் ஏற்கின்றது. எனவே இந்த வழக்கில் இருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை 12 மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது.
ஆனால் ஆரம்ப நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்து ஜூலை 30 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்கு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது.
இதனையடுத்து விசாரணை நீதிமன்றமான சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கே.பி.பிரம்மநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது அவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ளார். பெரு மழை மற்றும் வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. இதனால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார். அதே போல மற்ற குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் சார்பில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் எனவும் அவரவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யபட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக வரும் 30 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்தார்.
அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் அன்றைய தினம் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.