Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது: அ.தி.மு.க நிர்வாகி மலர்க்கொடி அதிரடியாக நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடியை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSP Armstrong murder case Thottam sekar wife Malar kodi removed from AIADMK Edappadi Palaniswami Tamil News

கடந்தாண்டு ஆகஸ்ட் 18-ல், சென்னை பட்டினப்பாக்கத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட 11 பேர் கைதாகினர்.

Advertisment

இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் (33) என்பவரும் உள்ளார்.

பொன்னை பாலுவின் மைத்துனரான அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரின் மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி மலர்க்கொடி என்பவருடன், அருள் அடிக்கடி பேசி வந்ததும், இருவருக்கும் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. மலர்க்கொடி மற்றும் அவரின் உதவியாளர் ஹரிஹரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருவருக்கும் தொடர்பு இருப்பதும், கூலிப்படையினருக்கு, மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் வரை கைமாறியதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 

மலர்க்கொடி பின்னணி என்ன? 

சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர். தோட்டம் சேகர் என அழைக்கப்படும் அவர், சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்தார். அ.தி.மு.க.,வின் பிரசார பாடகராகவும் இருந்தார். அவர், 2001-ல், மயிலாப்பூர் சிவகுமாரால் கொல்லப்பட்டார். தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் மலர்க்கொடி; சட்டம் படித்துள்ளார். இவர்களுக்கு, அழகர் ராஜா என்ற மகன் உள்ளார். மலர்க்கொடி திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளராக இருந்து வருகிறார். 

நீக்கம் 

இந்த நிலையில், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளராக இருந்து வரும் மலர்க்கொடியை கட்சியில் இருந்து நீக்குவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சிக்கு களங்கம், அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால்' அவரை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தி.மு.க. நிர்வாகி மகன் கைது 

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள அருளுடன் நெருங்கிய தொடர்பில் இவர் இருந்து, சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தி.மு.க.- வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசனின் மகனான சதீஷ் கைது செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment