பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று (ஜூலை 7) சென்னை வருகை தந்தார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மாயாவதி, :கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்த ஆம்ஸ்ட்ராங், அவர் தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சி. ஆம்ஸ்ட்ராங் அம்பேத்கர் கொள்கையுடன் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது, அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும். தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்துள்ளார் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் எப்படி கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்து செய்து வந்தாரோ அதேபோல் பிற நண்பர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்" என்று கூறி கொள்கிறேன் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“