பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Advertisment
கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டு இயக்குநர் பா.ரஞ்சின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் சனிக்கிழமையன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ் உள்ளிட்டோர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு அவர் அரசியல் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அப்போது ஆம்ஸ்ட்ராங் தனது மகளின் முதல் பிறந்தநாள் விழாவின் போது எடுத்த வீடியோவும் பலரை கண் கலங்க வைத்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 16வது நாளான நேற்று பொத்தூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பௌத்த வழிபாடு முறையில் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அவரது குடும்பத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பெரம்பூர் பந்தர் கார்டனில் ஆம்ஸ்ட்ராங் படத்திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆம்ஸ்ட்ராங் மகளின் முதல் பிறந்தநாள் விழாவின் போது எடுத்த வீடியோவும் ஒளிபரப்பட்டது. வீடியோவில் ஆம்ஸ்ட்ராங் மகளை தூக்கி கொஞ்சி விளையாடுவதை பார்த்த. பொற்கொடி மனம் உடைந்து கண்கலங்கினார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி பலரையும் உருக வைத்துள்ளது.