பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 5 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டு இயக்குநர் பா.ரஞ்சின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் சனிக்கிழமையன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ் உள்ளிட்டோர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
எழும்பூர் ரமடா ஹோட்டல் எதிரில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ’ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் அவர் தப்பானவர் என பாஜகவினர் எழுதினார்கள். திமுக ஐடி விங், ஆம்ஸ்ட்ராங்கை தப்பு தப்பாக எழுதியது. அதிகாரத்துக்கு எதிராக திரள்பவர்களை ரவுடிகள் என்று சொல்வீர்களா? அப்படியானால் நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான்.
இந்த படுகொலையை எளிதாக டீல் செய்துவிடலாம் என்று காவல்துறை நினைக்க வேண்டாம். அம்பேத்கர் வழியில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அயோக்கியர்களை கண்டுபிடிக்காத வரையில் காவல்துறையை சும்மா விடமாட்டோம்.
இந்த சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. 40 சதவிகிதத்துக்கும் மேல் தலித்துகள் வசிக்கிற பகுதி இது.
எத்தனை காலம் தலித் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் அடிமையாக இருக்க போகிறீர்கள். எப்போது மக்களுக்காக பேச போகிறீர்கள். பேச முடியவில்லை என்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடுங்கள்.
திமுக இருந்தாலும், அதிமுக இருந்தாலும் தலித்துகளுக்கு பிரச்சினை.
நாம் எதாவது ஒன்று பேசினாலே கதையை கட்டிவிடுவார்கள். நமது அண்ணன்களையே நமக்கு எதிராக நிறுத்துவது என்பதெல்லாம் மிகக் கொடுமை. திருமாவளவனுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு நாளும் உங்களுக்கு எதிராக நாங்கள் இருக்க மாட்டோம். உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும். எங்களுடைய குரல் நீங்கள். உங்களை ஒரு நாளும் விட்டுவிட மாட்டோம். உங்கள் கூடவே நிற்போம்.
இங்கிருக்கும் அரசியல் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது. இன்று இருக்கும் அமைப்புகளில் ஒற்றுமை இல்லை.
நாங்கள் பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள், ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய ஒரு நல்ல இடத்தை உங்களால் உருவாக்கித் தரமுடியவில்லை. பிறகு எதற்கு சமூக நீதி என்று பேசுகிறீர்கள்? திமுகவுக்கு மட்டும் எதிராக பேசவில்லை. எல்லா கட்சிகளுக்கும் எதிராகத்தான் பேசுகிறோம். எல்லா கட்சிகளுமே எங்களை ஏமாற்றுகிறார்கள்.
இப்போது நாங்கள் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். உங்களால் முடியுமா? சமூக நீதி பேசும் திமுக அரசால் தலித் மக்களுடைய கோரிக்கையை ஏற்க முடிமா? எங்களுக்கு எந்த கட்சியும் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை? என்று பா. ரஞ்சித் பேசினார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் விசிக உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.