Budget 2020 Tamil nadu schemes fund allotments new trains
Budget 2020 for Tamil Nadu Allocation: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சிறு, குறுந்தொழில்துறையை மேம்படுத்த மத்திய பட்ஜெட் உதவ வேண்டுமென்பது தொழில்முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை நம்பி 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். 1998 முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான சிறு, குறுந் தொழில் துறை, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை கடும் நெருக்கடிக்குத் தள்ளியது.
இந்த பட்ஜெட்டிலாவது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று மிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழில் துறையின் அடித்தட்டில் உள்ள சிறு, குறுந்தொழில்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், வரி விதிப்பு அமைய வேண்டும். குறிப்பாக, மூலப் பொருட்கள் மீதான வரி, இறக்குமதிக்குத்தான் உதவும் வகையில் இருக்கிறது. எனவே, வரி விதிப்புகளை அரசு மறுபரிசீலனை செய்து, ஒவ்வொரு பொருளின் சந்தை விலை, சர்வதேச சந்தை விலையை ஒப்பிட்டு, மாநிலங்களுக்கான தீர்வை மற்றும் வரி விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல், தமிழகத்தில் சென்னை - மாமல்லபுரம் - கடலூர் (179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ), பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ) உட்பட 7 ரயில் திட்டங்கள் கடந்த 2006 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அறிவிக்கப்பட்டன.
இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.10 ஆயிரம் கோடியாகும். ஆனால், இந்த திட்டங்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடந்த 11 ஆண்டுகளாக பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இன்றைய பட்ஜெட் அறிவிப்பு, இத்தகைய சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார். அவர் தனது உரையில் ஒளவையாரின் 'ஆத்திச்சூடியை' குறிப்பிட்டு பேசினார். ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடிய குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர், 3000 வருடங்களுக்கு முன்பே விவசாயத்தை பற்றி குறிப்பிட்டிருப்பதாக பெருமை தெரிவித்தார். விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற விளக்கத்தையும் அவர் அளித்தார்.
திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதித்துறை அமைச்சர்,
‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து’
என்றார்.
மாநில வாரியாக மற்றும் மத்திய முதலீடுகள் அனுமதி ஆணையம் அமைக்கப்படும்.
உற்பத்தியை பெருக்க திட்டம், தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்: நிதியமைச்சர்
ஏற்றுமதியாளர்களுக்கான மானியம் முழுவதும் ஆன்லைனில் வழங்கப்படும்
ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த பிரீமியத்தில் காப்பீடு திட்டம்
20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் மின்வசதி செய்ய உதவிகள் வழங்கப்படும்.
2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
விவசாயத்துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள 16 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை:
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஆய்வுகள் ஊக்குவிக்கப்படும்.
ஆதிச்சநல்லுரில் சுற்றுலாத் துறையின் மூலம், தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கீழடியின் தொன்மை பேசப்படாததை குறித்து தமிழக எம்.பிக்கள் உரக்கக் குரலெழுப்பினர்.
அரசு மருத்துவமனைகளுடன் தனியார் மருத்துவமனை
அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைப்பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதால் மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.