தமிழ்நாடு பட்ஜெட் 2025 -26: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (மார்ச் 14) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி ரூ. 2 கோடியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி - தங்கம் தென்னரசு
அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கணினி தமிழ் ஒலிம்பியாட் போட்டி
கணினி தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை ஒரு கோடி வழங்கப்படும். இலக்கியங்களை மொழிபெயர்க்க முதல் கட்டமாக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி திட்டங்கள்
அகழ்வாராய்ச்சிக்கு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு, காவேரி பூம்பட்டினம் முதல் நாகை வரை அகழ்வாய்வு செய்யப்படும். தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், 40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.
திருக்குறள் மொழி பெயர்ப்பு
28 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 நூல்கள் மொழிபெயர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.