சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட், வரும் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மார்ச் மாதம் இறுதியில் நடப்பாண்டுக்கான நிதி மசோதா செயல்பாடுகள் நிறைவுயாகின்றன. எனவே, ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், அரசு கருவூலங்களை தங்கு தடையின்றி இயக்கவும், 2018-19ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி 8-ந் தேதியன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதன் பின்பு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல். ஏ.க்கள் உரையாற்றினார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலளித்து ஜனவரி 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய அரசின் பட்ஜெட் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மேல் மாநில அரசு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, வரும் 19 ஆம் தேதி துணை முதல்-அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே போல், 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியில் சலசலப்பு ஏற்படும். இதனால், நிர்வாக சிக்கலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காரணங்களை கருத்தில் கொண்டே, சட்டசபையில், பட்ஜெட் விரைவில் தாக்க செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.