Advertisment

ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தகர்ப்பதா?; கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வுக்கு பா.ஜ.க, பா.மக தலைவர்கள் கண்டனம்.

author-image
WebDesk
New Update
Rama anna

தமிழக அரசு வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

Advertisment

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை. 

பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு? 

பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்வு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை உட்பட  தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு  ஆணையிட்டிருக்கிறது. இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112% அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து  பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள அறிவிக்கையின்படி சென்னையில் 8900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து  ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது 112% உயர்வு ஆகும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10% ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பத்திரப் பதிவுக் கட்டணம், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்திய தமிழக அரசு, இப்போது வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது.  நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment