எருது விடும் விழா: கிருஷ்ணகிரி-பெங்களூரு நெடுஞ்சாலையில் பதற்றம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீசார் தடியடி - Bull racing ceremony Tension on Krishnagiri-Bangalore highway Police action | Indian Express Tamil

எருது விடும் விழா: கிருஷ்ணகிரி-பெங்களூரு நெடுஞ்சாலையில் பதற்றம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீசார் தடியடி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடி உடைந்தது. போலீஸார் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

எருது விடும் விழா: கிருஷ்ணகிரி-பெங்களூரு நெடுஞ்சாலையில் பதற்றம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு; போலீசார் தடியடி

சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதுபோல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

இதேபோல், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் விழாக்களில், காளைகளின் கொம்புகளில் பரிசுத் தொகையைக் கட்டி ஓட விடுவது வழக்கம். சீறி பாய்ந்து செல்லும் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டுள்ள பரிசுத் தொகையை இளைஞர்கள் பறித்துச் செல்வார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவைத் தொடர்ந்து, வேப்பனப்பள்ளி பகுதிகளில் நடந்த எருதுவிடும் விழாக்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால் காளைகள் முட்டியதில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனால், எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்குவதில், மாவட்ட நிர்வாகம் கடும் நிபந்தனைகளை விதித்தது.

சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவை நடத்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி இருந்தனர். இதற்கான அனுமதி அரசிதழில் நேற்று (பிப்.1) வெளியானது. இதனை தொடர்ந்து ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, சூளகிரி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்சார வாரியத்தினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் சூளகிரி காவல்துறையினர் இன்று (பிப்.2) கூட்டுப்புலத்தணிக்கை செய்து அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கினர்.

எருது விடும் விழா தொடங்க இருந்ததை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் விழாவினைக் காண அதிகாலை முதலே கோபசந்திரம் கிராமத்தில் திரண்டனர். மேலும், காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்காததால், விழா குழுவினர் நிகழ்ச்சியை தொடங்கமால் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்களும், பொதுமக்களும், காலை 7 மணியளவில் கோபசந்திரத்தில் கிருஷ்ணகிரி – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தியும், கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், மாவட்டம் முழுவதும் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் வலியுறுத்திய நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் நிகழ்விடத்திற்கு சென்றார். அதிவிரைவுப்படையினர், வஜ்ரா வாகனம், துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஆகியோரும் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடி உடைந்தது. போலீஸார் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பிய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

4 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்ப்பட்டது. சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் நகரத் தொடங்கின. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியிலும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bull race ceremony tension on krishnagiri bangalore highway police action