கோவை மேட்டுப்பாளையத்தின் முக்கிய வீதியில் உள்ள கடையில் இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார்(51) என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது.நேற்று சொந்த வேலை காரணமாக கடை திறக்கவில்லை என கூறப்படுகிறது.
Advertisment
இந்தக் கடையை செந்தில்குமாரின் மனைவி சாந்தாமணி நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் அக்கம்பக்கம் கடை வைத்துள்ளவர்கள் செந்தில்குமாருக்கு நகைக்கடை திறந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்,மனைவி இருவரும் நகைக்கடைக்கு வந்து பார்த்த பொழுது நேற்றிரவு இக்கடைக்கு வந்த கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து,ஷட்டரை கடப்பாரையால் நெம்பி கடையை திறந்திருப்பது தெரியவந்தது.
மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த அரை கிலோ தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிப்பொருட்கள்(தட்டு,பூக்கூடை,குடம்,குத்து விளக்கு) ஆகியவற்றை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கோவையில் இருந்து தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மேலும் துப்பு துலக்குவதற்காக கோவையில் இருந்து வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதுவும் காரமடை - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சற்றுதூரம் சென்று பின்னர் நின்று விட்டது.
விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்
மேலும் கொள்ளையர்கள் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக தப்பிச்சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளை நடைபெற்ற நகைக்கடையில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது,அவர் பல்வேறு வழக்குகளை கையாண்டது போலவே இந்த கொள்ளைச்சம்பவத்திலும் விரைவில் கொள்ளையர்கள் பிடிக்கப்படுவார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரமடையில் மிகவும் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil