மேட்டுப்பாளையம் அருகே பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் நீரூற்று போல போல பீய்ச்சி அடித்து சாலையில் வழிந்து ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியில் நகராட்சி சார்பில் ரூபாய் 99 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீர் குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படக்கூடிய நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள சங்கர் நகர் என்னும் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு தண்ணீர் வெளியேறி சாலை முழுவதும் ஓடியதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
சாலையோரம் பதிக்கப்பட்ட குழாய் பகுதியில் டிப்பர் லாரி மோதியதால் உடைப்பு ஏற்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது..
கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதன் வழியே செல்லும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டு உடைப்பை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீரூற்று போல் சாலையோரம் கழிவு பீய்ச்சியடித்தது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“