Advertisment

பேருந்து கட்டணம் உயர்த்த தனி ஆணையமா? அன்புமணி கண்டனம்; போக்குவரத்துத் துறை மறுப்பு

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியதையடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
buses anbumani 1

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியதையடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே,   பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment



தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு, பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மூன்று கட்டங்களில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு என அனைத்து வழிகளிலும் ஏழை, எளிய மக்களை தமிழக அரசு வாட்டி வதைத்து வருகிறது. 

இப்போது கூடுதலாக பேருந்து கட்டணங்களையும் உயர்த்தும் நோக்குடன் அதற்காக தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத் தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டில் வீடுகளுக்கு உயர்த்தப்பட்ட 2.18% மின் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டதை மிகப்பெரிய சாதனையாகக் கூறி பெருமைப்பட்டுக் கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் மின்சாரக் கட்டணம் சுமார் 5% உயர்த்தப்பட்டது குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. மின்னுற்பத்தித் திட்டங்களை குறித்த காலத்தில் முடிக்காதது, அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி இழப்பை ஏற்படுத்தியது ஆகியவற்றால் தான் மின்சார வாரியத்தின் இழப்பும், கடன் சுமையும் அதிகரித்தன. 

அதை சீரமைக்க முடியாத அரசு, மின்கட்டணத்தை உயர்த்தி, அந்த பழியை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது போட்டது. இப்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தி, அந்தப் பழியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே தனி ஆணையத்தை அரசு அமைக்கிறது. மின்சார வாரியம் சீரழிந்ததற்கு தவறான, ஊழல் நிறைந்த நிர்வாகம் தான் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சீரழிந்ததற்கும் தவறான, ஊழல் மலிந்த நிர்வாகம் தான் காரணம் என்பதும் உண்மை ஆகும். அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் அஞ்சும் நிலை தான் உள்ளது. 

கூரை பிய்த்துக் கொண்டு பறக்கும் பேருந்துகள், பின்புறத் தடுப்பு இல்லாத பேருந்துகள், சக்கரம் கழன்று ஓடும் பேருந்துகள், இருக்கை முறிந்து நடத்துனரையே வெளியில் தூக்கி வீசும் பேருந்துகள், இருக்கையிலிருந்து நேராக சாலையில் விழும் அளவுக்கு ஓட்டை நிறைந்த பேருந்துகள் என அவலங்களின் உச்சமாக அரசுப் பேருந்துகள் திகழ்கின்றன. 

இந்த அலங்கோலங்களை சரி செய்யாமல், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் களையாமல் பேருந்து கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,  அதற்கு போக்குவரத்துத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை எனவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனவும் போக்குவரத்துத் துறை உறுதி அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment