பஸ் கட்டண உயர்வு : 2-வது நாளாக மறியல், பயணிகள் ஆவேசம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 2-வது நாளாக தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதீத கட்டண உயர்வால் பயணிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 2-வது நாளாக தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதீத கட்டண உயர்வால் பயணிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

பஸ் கட்டண உயர்வு தமிழ்நாட்டில் அமுல் படுத்தப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான பஸ் கட்டண உயர்வை ஜீரணிக்க முடியாமல் பயணிகளே பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து 2-வது நாளாக இன்று (21-ம் தேதி) தமிழ்நாட்டின் பல இடங்களில் போராட்டம் நீடித்தது. இன்று காலையில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் இருந்த கண்டக்டர் பயணிகளிடம் அரசு புதிதாக அறிவித்த கட்டண உயர்வின் படி டிக்கெட் வசூலித்தார். அப்போது பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறினார்கள். டிரைவரிடம் தகராறு செய்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே நடுவழியில் பஸ்சை நிறுத்தினர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஆனால் பயணிகள் அதை ஏற்க மறுத்தனர்.

பின்னர் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு, பஸ்சை பணிமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து நடந்தே சொந்த ஊருக்கு திரும்பினர். விருத்தாசலம் செல்ல வேண்டியவர்கள் வேறு பஸ்களில் ஏறி, உயர்த்தப்பட்ட கட்டணத்தை வழங்கி தங்களது பகுதிக்கு சென்றனர்.

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் செல்வதற்கு 30-க்கும் மேற்பட்டோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் நேற்றிரவு திருப்பதி செல்ல திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு பஸ் ஏற வந்தனர். அவர்களிடம் கண்டக்டர் உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ.100 கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நாங்கள் ஏற்கனவே திருப்பதி செல்ல ரூ.374 மற்றும் முன்பதிவு செய்ய பணம் கொடுத்துள்ளோம். திடீரென நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம் கேட்டால் நாங்கள் எப்படிதர முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி அவர்களை பழைய கட்டணத்திலேயே பஸ்சில் திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவளர்ச்சோலையில் 3 பஸ்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மீட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கண்டக்டர் இரு மடங்காக பணம் கேட்டதால் நடுவழியிலேயே இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றனர். பயணிகள் வாக்குவாதம் காரணமாக திருச்சியில் இயக்கப்பட்ட சில பஸ்களில் பழைய கட்டணத்தையே கண்டக்டர்கள் வசூலித்தனர்.

திருநெல்வேலியில் இருந்து ஈரோடு வந்த அரசு பஸ்சில் முன்பதிவு செய்த பயணிகளிடம் கண்டக்டர், ‘கூடுதல் பணம் கொடுத்தால் தான் பஸ்சில் ஏற வேண்டும்’ என்று கெடுபிடியாக கூறி விட்டார். இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘முன்பதிவை நம்பி தான் பணம் எடுக்காமல் வந்து விட்டோம். கொஞ்சம் பொறுங்கள் கையில் பணம் இல்லை. ஏ.டி.எம். போய் பணம் எடுத்து வருகிறோம்’ என்று கூறி ஏ.டி.எம். சென்டருக்கு ஓடினர். கூடுதல் கட்டணம் கொடுத்த பிறகு தான் அந்த கண்டக்டர் அவர்களை பஸ்சில் ஏற்றினார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

குமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலூரில் நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ரெயிலடி அருகில் மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் திருவையாறில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கத்திரிக்கொல்லை சாவடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வேலூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட ஊர்களுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் பயணிகள் பலர் முன்பதிவு செய்து இருந்தனர்.

கண்டக்டர் அவர்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து பயணிகள் கீழே இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நீடிக்கின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close