பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அதன் LIVE UPDATES
பஸ் கட்டண உயர்வு, தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. தினம்தோறும் டிக்கெட் எடுத்து பஸ்ஸில் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த கட்டண உயர்வால் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
பஸ் கட்டணத்திற்கு மட்டும் தினமும் 30 ரூபாய் அளவுக்கு செலவு செய்த மாணவ, மாணவிகள் இப்போது 50 அல்லது 60 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறும் வரை போராடுவோம் என மாணவ, மாணவிகள் கூறி வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக நடைபெறும் போராட்டத்தின் LIVE UPDATES
பகல் 1.00 : பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
67% முதல் 108% வரையிலான பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறுக - முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!
பகல் 12.00 : குமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் செய்தனர். இதனால் நித்திரவிளை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரி மாணவ, மாணவிகள்
பகல் 11.00 : பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பெரம்பலூர் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.
பகல் 10.30 : பேருந்து கட்டண உயர்வை கட்டித்து கந்தர்வகோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காலை 10.00 : கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். ஈரோடு கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாமக்கல் லத்துவாடியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.
காலை 9.30 : தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகிறார்கள்.
காலை 9.00 : ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். நேற்று திருப்பூரில் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை இது நினைவு படுத்துகிறது.