பஸ் கட்டண கொந்தளிப்பு : மாணவர்கள் மீது தடியடி, முதல்வர் எடப்பாடி வீடு முற்றுகை

பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் நாளையும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் புதிய பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அரசின் இந்த கட்டண உயர்வு சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மிகவும் பாதித்துள்ளது. 10 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பயணிகள் தற்போது 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கட்டண உயர்வு என்றால் ஏதோ 2 அல்லது 3 ரூபாய் உயர்த்தலாம். ஆனால் இப்படி இரண்டு மடங்குக்கும் அதிகமாக பஸ் கட்டணங்களை உயர்த்தினால் எப்படி பயணம் செய்ய முடியும்? என்பதே மக்களின் முதல் கேள்வியாக உள்ளது.

அரசின் இந்த கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இருப்பினும், பேருந்து கட்டணம் அறிவிக்கப்பட்டது முதல், பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களையும், சாலை மறியல்களையும் நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழக்கம்போல இலவச பஸ் பாஸ் தொடரும். தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பழைய கட்டணத்தின் அடிப்படையில் 50 சதவிகித கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதாவது, பஸ் கட்டண உயர்வால் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு நேராமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலமாக மாணவ மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என அரசுத் தரப்பு நம்பியது. ஆனால் முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்தும் மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. அதன் LIVE UPDATES

மாலை 3.00 : பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 2.30 : திருப்பரங்குன்றத்தில் பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

பிற்பகல் 2.00 : பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பிற்பகல் 1.45 : பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

பிற்பகல் 1.30 : பஸ் கட்டண உயர்வு எதிரொலியாக ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கடலூரில் மாணவிகள் ரயில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணம் செய்கிற காட்சியை காண முடிந்தது.

பகல் 1.00 : பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பகல் 12.50 : பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரை முனிச்சாலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகல் 12.45 : திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பஸ் கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. சட்ட மன்றத்தை உடனே கூட்ட வேண்டும்’ என்றார்.

பகல் 12.30 : பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பகல் 12.00 : இன்று புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பகல் 11.00 : பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 500 பேர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலை 10.30 : பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன’ எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

காலை 10.30 :  தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், பெரம்பலூர் அருகே எசனையில் பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 10.00 : மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலை 9.30 : தஞ்சை கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் நாளையும் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் மனோகரன் அறிவித்துள்ளார்.

திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை குழு தலைவருமான கனிமொழி எம்.பி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

More Details Awaited….

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close