/indian-express-tamil/media/media_files/2025/06/27/whatsapp-image-202-2025-06-27-19-00-50.jpeg)
Tamilnadu
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை அனுமதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் 2024-2025 கல்வியாண்டில் சுமார் 23.5 லட்சம் பள்ளி மாணவர்களும் 2 லட்சம் கல்லூரி மாணவர்களும் பயனடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், மாணவர்கள் புத்தகப்பைகள் மற்றும் உணவுப்பைகளுடன் பயணிக்கும்போது பேருந்துகளில் கடும் நெருக்கடி ஏற்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது அன்றாட காட்சியாகிவிட்டதாகவும் மனுதாரர் கவலை தெரிவித்தார். இத்தகைய போக்கு விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதால், அதிக நெருக்கடி உள்ள நேரங்களில் மாணவர்களுக்காகத் தனிப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "படிக்கட்டுகளில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்" என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர். மேலும், "நடத்துனரின் அறிவுறுத்தலையும் மாணவர்கள் பின்பற்ற மறுக்கின்றனர். போலீசார் இந்த விதிமீறல்களைப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கலாம்" என்று கூறி காவல்துறைக்கு முக்கிய அதிகாரம் அளித்தனர்.
மேலும், நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கும்போது, பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் உள்ளே இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.