பஸ் ஸ்டிரைக், 7-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் தொடர்வதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா?
பஸ் ஸ்டிரைக், ஜனவரி 4-ம் தேதி இரவு முதல் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில், 7-வது நாளாக இன்றும் (10-ம் தேதி) போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 4-ம் தேதி போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் போக்குவரத்து ஊழியர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.
முதல் இரு நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய போக்குவரத்து ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் நீதிமன்றமும் அரசும் இதில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக ஓரளவு இயங்கிய பஸ்களும் இப்போது முடக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் இன்றும் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ என மாற்று போக்குவரத்தை நாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
பஸ் ஸ்டிரைக் நீடிப்பதால் அந்த பஸ்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அந்த பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் கிடைக்கப்போவதில்லை. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் சென்னை போன்ற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுடன், போராடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட சில தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. முதல்வர் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இன்றும் இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.