பஸ் ஸ்டிரைக் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பு விவாதம் இங்கு தரப்படுகிறது. இன்று (11-ம் தேதி) இதில் ஒரு முடிவு கிடைக்கும் என தெரிகிறது.
பஸ் ஸ்டிரைக், தமிழ்நாடு முழுவதும் மக்களை இன்னலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் சட்டவிரோதமாக நடைபெறுவதாகவும் எனவே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் வாரகி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
பஸ் ஸ்டிரைக் தொடர்பான இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் நேற்று (ஜனவரி 10) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘இன்னும் 4 நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். இதற்காக ஸ்டேட் வங்கியில் இருந்து அரசு கடன் பெற உள்ளது. ஓய்வூதியம் பெறுவேருக்கு 750 கோடி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எஞ்சிய தொகையை வழங்க அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது’ என்றார்.
போக்குவரத்து தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் உள்ளிட்டோர், ‘இது 7 ஆயிரம் கோடி பிரச்சினை. வெறும் 750 கோடியை ஒதுக்குவது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகாது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசின் கையில் தான் உள்ளது. தொழிலாளர்களும் நல்ல மனநிலையில் இருந்தால்தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். ’ என்றார்கள்.
அதற்கு நீதிபதிகள், ‘போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அதை வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் இப்போது இந்த பிரச்சினை வந்திருக்காது. வேலைநிறுத்தம் என்பது இறுதிகட்ட முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். ஓராண்டுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது முறையா?.
வெறும் 0.13 காரணி தான் பிரச்சினை. பொங்கல் பண்டிகை நெருங்குவதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சினைக்கு இருதரப்பும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே 2.44 காரணி ஊதிய உயர்வை முதலில் ஏற்றுக்கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப தொழிலாளர்கள் தயாராக உள்ளார்களா? ஊதிய வித்தியாசத்தை பேசி தீர்வு காணுங்கால் இது குறித்து தொழிலாளர் மனநிலை என்ன என்பதை அறிந்து தெரிவியுங்கள்’ என தெரிவித்தனர்.
அப்போது தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக ஆலோசித்துவிட்டு வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததால், விசாரணை மாலை 6 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 13 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் அரசு அறிவித்துள்ள ‘‘ 2.44 காரணி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துவிட்டு, இது தொடர்பாக அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்தால் நாங்களும் உடனடியாக பணிக்கு திரும்புகிறோம்’’ என தொழில் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் தங்களின் போராட்டத்தை கைவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘இந்த தொழிற்சங்கத்தினர் மற்றவர்களை தடுக்காமல் இருந்தால் 70 சதவீதம் பேர் பணிக்கு வரத் தயாராக உள்ளனர். இந்த ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. 34 சங்கத்தினர் ஊதிய ஒப்பந்த விகிதத்தை ஏற்றுக் கொண்டனர். தற்போது 21 சங்கங்கள் மட்டுமே ஏற்கவில்லை’ என்றார்.
அப்போது தொழிற்சங்க தரப்பு வழக்கறிஞர்கள், ‘34 சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்றதாக இருந்தால் ஏன் 90 சதவிகிதத்திற்கு அதிகமான பேருந்துகளை இயக்க முடியவில்லை. அவர்களை வைத்தே இயக்க வேண்டியது தானே. புறவாசல் வழியாக போலியான ஒரு ஒப்பந்தத்தை அரசு ஏற்படுத்திவிட்டு அதனை ஒரு லட்சத்திற்கும் மேம்பட்ட தொழிலாளர் மீது திணிக்க அரசு முயற்சிக்கின்றது. இது அரசின் தவறான நடவடிக்கை. பொதுமக்கள் நலனில் தொழிலாளர்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. அதே பாதிப்பு போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினரிடம் உள்ளது என்பதை அரசு உணர வேண்டும். இப்பிரச்சணையில் அரசுக்கே அக்கறை இல்லை என்றால், எங்களுக்கும் அக்கறை இல்லை’ என்றனர்.
இதில் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. இந்த நேரத்தில் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே பொங்கல் பண்டிகைக்காக வரும் 17 ஆம் தேதி வரையாவது பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொழிலாளர்கள் மனசாட்சியுடன் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பான முடிவை நாளை (11-ம் தேதி) நீதிமன்றத்தில் தெரிவியுங்கள், தொழிற்சங்கங்களும் நல்ல முடிவுடன் வருவார்கள் என இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.