பஸ் ஸ்டிரைக், 2 முறை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும் முடிவுக்கு வரவில்லை. குடும்பத்தினருடன் போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
பஸ் ஸ்டிரைக், ஜனவரி 4-ம் தேதி இரவு முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 5-ம் தேதி இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘உடனே போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்’ என உத்தரவிட்டது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பு அந்த உத்தரவை ஏற்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இன்று (ஜனவரி 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, ‘போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க’ உத்தரவிட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்கனவே 2.44 மடங்கு காரணி அடிப்படையில் ஊதிய உயர்வுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. தொழிலாளர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கையான நிலுவைத் தொகைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததால் பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் கூடி, ஸ்டிரைக்கை தொடர்வது என முடிவெடுத்தன. இது தொடர்பாக திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. தலைவர் சண்முகம் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். அரசு உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜனவரி 9) போக்குவரத்து பணிமனைகள் முன்பு குடும்பத்தினருடன் போராட்டம் நடத்துவோம்’ என்றார் அவர்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘இதற்கு முன்பு எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவில் கிட்டத்தெட்ட அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி பொங்கலுக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்குள் பதில் வழங்காத தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
2 முறை ஐகோர்ட் உத்தரவிட்டும், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால், தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு தொடர்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சூழலில் இந்தப் போராட்டம் மக்களை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.