பஸ் ஸ்டிரைக் LIVE UPDATES : ”போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை”: அமைச்சர் விஜயபாஸ்கர்

பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக தொடர்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தே இந்தப் போராட்டம் ! அதன் LIVE UPDATES இங்கே...

பஸ் ஸ்டிரைக் 3-வது நாளாக தொடர்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தே இந்தப் போராட்டம் ! அதன் LIVE UPDATES இங்கே…

பஸ் ஸ்டிரைக் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் இடையிலான 13-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை டிசம்பர் 4-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடந்தது. ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுகள் நடந்திருந்ததால் இதில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ‘2.57 மடங்கு காரணி அடிப்படையிலான’ ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் அரசுத் தரப்பு இறுதியாக 2.44 மடங்கு காரணி அடிப்படையிலான ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் போட்டது. இதை சி.ஐ.டி.யு, தொ.மு.ச. உள்ளிட்ட 13 சங்கங்கள் ஏற்கவில்லை.

பஸ் ஊழியர்கள் டிசம்பர் 4-ம் தேதி இரவு 7 மணி வாக்கில் இருந்து தமிழகம் முழுவதும் திடீரென பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்தப் பிரச்னை தொடர்பாக இந்தியன் மக்கள் மன்றத்தை சேர்ந்த வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, ‘போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை 5-ம் தேதி இரவுக்குள் கைவிட்டு பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால், அரசு பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ‘திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்’ என தொ.மு.ச. தலைவர் சண்முகம், சிஐடியு நிர்வாகி சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தனர். பஸ் ஸ்டிரைக் இன்றைய நிலவர LIVE UPDATES

காலை 11.55:அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் நாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காலை 9.00 : சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 20 சதவிகித பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 15 முதல் 20 சதவிகித பேருந்துகளே இயக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

காலை 8.30 : சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகளின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

காலை 8.00: மதுரையில் 40 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. சென்னையில் அதிமுக.வின் அண்ணா தொழிற்சங்கத்தினர் உதவியுடன் சொற்ப பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காலை 7.45 : சென்னையில் தி.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் பஸ் ஸ்டிரைக் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காலை 7.30 : 3-வது நாளாக இன்றும் (6-ம் தேதி) மாநிலம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் நீடிக்கிறது. ‘நடவடிக்கை பாயும்’ என அரசும் உயர் நீதிமன்றமும் எச்சரித்தும் பெரும்பாலான ஊழியர்கள் பணியில் சேரவில்லை. மாநிலம் முழுவதும் 10 சதவிகிதம் அளவுக்கே பஸ்கள் இயங்குவதாக ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன. திருச்சி மலைக்கோட்டை பணிமனையில் 106 பேருந்துகளில் 22 பேருந்துகள் இயங்குகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close