பஸ் ஸ்டிரைக் : எடப்பாடி - மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? மூடி மறைப்பது யார்?

பஸ் ஸ்டிரைக் குறித்து எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் இடையிலான தொலைபேசி உரையாடலை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருப்பது அரசியல் சோகம்!

பஸ் ஸ்டிரைக் குறித்து எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் இடையிலான தொலைபேசி உரையாடலை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருப்பது அரசியல் சோகம்!

பஸ் ஸ்டிரைக் தமிழகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் ஜனவரி 4-ம் தேதி இரவு முதல் நடைபெற்று வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் போராட்டங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதியே பணிக்கு திரும்பும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டும், அதை அவர்கள் ஏற்கவில்லை.

பஸ் ஸ்டிரைக் ஏற்படுத்திய சிரமங்களுக்கு மத்தியில், அரசியல் ரீதியாக ஒரு சின்ன ஆறுதலையும் அது கொடுத்தது. அதுதான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது!

மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து சுனாமி நிவாரணம் வழங்கியவர்தான்! ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் ஓரிரு முறை அவரை சந்தித்து பொதுப் பிரச்னைகளை வலியுறுத்தி பேசியிருக்கிறார். ஆனாலும் சுலபமாக முதல் அமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் போனில் தொடர்புகொண்டு பேசியிருப்பது, தமிழக அரசியலில் புதிய நாகரீக அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த போன் உரையாடல் தொடர்பான தகவலை மு.க.ஸ்டாலினே முதலில் வெளியிட்டார். இது தொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், போக்குவரத்து வசதியை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.’ என பதிவு செய்தார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அமைச்சர் பேசுவதாக முதல்வர் கூறினார். அமைச்சர் பேசுவதைவிட, நீங்கள் பேசினால் நல்ல முயற்சியாக அமையும் என நான் கூறினேன். அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முதல்வர் எதையும் தெரிவிக்கவில்லை’ என கூறினார்.

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவு மற்றும் பேட்டியில், தொலைபேசி உரையாடலில் நிகழ்ந்த சில அம்சங்களை மறைத்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதங்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு முதல்வரின் இன்றைய அறிக்கையில் வெளிப்பட்டது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

‘திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேற்று (6-ம் தேதி) தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இதுவரை எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தேன்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ள சூழலில், சில தொழிலாளர்களின் போராட்டம் தவறானது என்றும் தெரிவித்தேன். ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இதுவரை 23 முறை நடந்திருக்கிறது. தொழிலாளர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிக்கை வைத்தனர். 2013-ல் வழங்கப்பட்ட 5.5 சதவிகித ஊதிய உயர்வை 2.44 காரணியுடன் சேர்த்தால், அவர்கள் கேட்கும் 2.57 காரணிக்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்கிற விவரம் தெரிவிக்கப்பட்டது.

ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ11,361, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ2684 ஆகும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஊதிய உயர்வைவிட இந்த ஊதிய உயர்வு அதிகம் என்கிற விவரத்தையும் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் நான் எடுத்துரைத்த விவரங்களை தெரிவித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என கூறினேன்.

ஆனால் திமுக தனது அறிக்கையில், முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர்கள் பிரச்னையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக்கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்கவில்லை என இன்று (7-ம் தேதி) காலை வெளிவந்த செய்தித்தாள்கள் மூலமாக அறிந்தேன்.

எதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை விட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இத்தருணத்தில் பொதுமக்கள் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதாவது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்ட அளவுக்கு கிட்டத்தெட்ட ஊதிய உயர்வு வழங்கி ஆகிவிட்டது என்பதையும், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிலான அதிகபட்ச ஊதிய உயர்வு இது என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியதை மு.க.ஸ்டாலின் மறைத்துவிட்டதாக பறைசாற்றுகிறது முதல்வரின் அறிக்கை. தவிர, பொதுமக்களை பாதிக்கிற வகையில் போராட்டம் நடத்துகிற திமுக சார்ந்த தொழிற்சங்கங்களிடம் இதை அறிவுறுத்தும்படி சொன்னதையும் ஸ்டாலின் குறிப்பிடவில்லை என முதல்வர் குற்றம் சாட்டுகிறார்.

மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஏனோ விரிவாக அவர் பதிலளிக்கவில்லை. குறிப்பாக குற்றச்சாட்டாக முதல்வர் குறிப்பிட்ட இரு விவரங்களுக்குள் ஸ்டாலின் நுழைய வில்லை. மாறாக, ‘போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அமைச்சர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டுமென்கிற என் கோரிக்கையை மூடி மறைக்கவே, நான் தொலைபேசியில் முதலமைச்சரிடம் ஒருதலைபட்சமாக பேசியதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.’ என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

அதாவது, முதல்வரே தலையிட்டு பேசவேண்டும் என வைத்த கோரிக்கையை முதல்வர் தனது அறிக்கையில் மறைத்துவிட்டதை ஸ்டாலினும் அம்பலப்படுத்தியிருக்கிறார். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் போனில் பேசியதில் இருவருமே அவரவருக்கு சாதகமான அம்சத்தை மட்டும் முன்னிறுத்துவது இதில் இருந்து வெளிப்படை ஆகிறது. போனில் பேசியதால் ஏற்பட்ட நாகரீக உதாரணம், அதைத் தொடர்ந்து நடைபெறும் ‘கருத்து மறைப்பு’களால் அநாகரீக அரசியலாக மாறுகிறது.

 

×Close
×Close