பஸ் ஸ்டிரைக் பாதிப்பை தணிக்க த.மா.கா. இளைஞரணி சார்பில் ஈரோட்டில் இலவச வேன் சேவையை த.மா.கா. இளைஞரணி ஏற்பாடு செய்து அசத்தியிருக்கிறது.
பஸ் ஸ்டிரைக் பாதிப்பை தணிக்க த.மா.கா. இளைஞரணி ஏற்பாட்டில் இலவச வேன் சேவை
பஸ் ஸ்டிரைக், தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஜனவரி 4-ம் தேதி தொடங்கிய இந்த ஸ்டிரைக், 8-வது நாளாக இன்றும் (ஜனவரி 11) தொடர்கிறது. அரசு வழங்கிய 2.44 மடங்கு காரணி ஊதிய உயர்வை ஒப்புக்கொள்ளாமலும், நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
பஸ் ஸ்டிரைக்கினை தீவிரமாக திமுக மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்களே முன்னெடுத்து வருகின்றன. எனவே மேற்படி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அந்த சங்கங்கள் பணிக்கு திரும்ப திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட சங்கங்களை கேட்டுக்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். முதல் அமைச்சர் முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினால், தானும் உதவி செய்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக.வும், பாஜக.வும் உடன்படவில்லை. மற்றக் கட்சிகள் அனைத்தும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கின்றன. ஆனாலும் ஒரு கோடி தொண்டர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் என கணக்கு காட்டும் எந்தக் கட்சியும் இதில் மக்களின் பாதிப்பைப் போக்க தங்களால் ஆன உதவியை செய்ய முன்வர வில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மட்டுமே அதற்கான முயற்சிகளை இன்று (11-ம் தேதி) முன்னெடுத்திருக்கிறது. இன்று காலை ஈரோட்டில் இருந்து திண்டல், பவானி, சிற்றோடு உள்ளிட்ட ஊர்களுக்கு இலவச வேன் சேவையை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ் முன்னிலையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தார்கள்.
த.மா.கா. இளைஞரணி செய்து கொடுத்த இந்த வசதியை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களில் பலரும் த.மா.கா.வின் இந்த முயற்சியை பாராட்டினர்.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடிக்கும் வரை இந்த இலவச சேவையை நீடிக்க இருப்பதாகவும், ஈரோட்டைத் தொடர்ந்து இதர மாவட்டங்களிலும் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜ் கூறினார்.