கும்பகோணத்திலிருந்து நவக்கிரக தலங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கும்பகோணத்திலிருந்து திங்களூர்(சந்திரன்), ஆலங்குடி(குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரிய பகவான்),கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன்கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி பகவான்) ஆகிய நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; இந்த சிறப்பு பேருந்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்ல இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்தப் பேருந்தில் பயணம் செய்ய, இந்தமாதம் முழுவதும் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
ரூ.750 கட்டணத்தில் நவக்கிரக கோயில்களுக்கு சென்றுவரும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரவேற்பைப் பொறுத்து, பேருந்துசேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். இதேபோல, அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்தப் பேருந்து சேவை குறித்து கும்பகோணம் வணிகர் சங்கத்தின் செயலாளரும், சமூக ஆர்வலருமான சத்திய நாராயணன் தெரிவிக்கையில்; தமிழக அரசின் இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பை பெரும். மனதார வரவேற்கின்றேன், அதே நேரம் இந்த நவக்கிரக ஆன்மீக சுற்றுலா சேவையை தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்ய வேண்டும். கும்பகோணம் கோட்டத்திலிருந்து சாதாரண கட்டணம் உடைய பேருந்து முக்கால் மணி நேர இடைவெளியில் நான்கு அல்லது ஐந்து பேருந்துகள் இயக்க வேண்டும். இதில் முதல் பேருந்து முதல் நவக்கிரக கோவிலில் இறங்கும் பக்தர்களை இறக்கி விடும். பக்தர்கள் நிதானமாக சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் அவர்களை அடுத்து வரும் இரண்டாவது பேருந்து ஏற்றி அதற்கு அடுத்து உள்ள இரண்டாவது நவக்கிரக கோவிலில் இறக்கி விடும். இப்படி தொடர் ஜோதி ஓட்டம் போன்று பேருந்துகளை இயக்கினால் மட்டுமே நவக்கிரக ஆன்மிக வழிபாடு திட்டம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சுழற்சி முறையில் தினசரி பேருந்துகளை இயக்கினால் பக்தர்கள் அல்லாத பொதுமக்களுக்கும் பேருந்துகளை பயன்படுத்தி நவக்கிரக ஆலயங்களை தரிசிக்க முடியும். தொடர் பேருந்துகளை இயக்கும்போதுதான் தமிழக அரசின் இந்த அருமையான திட்டம் முழுமையான வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“