மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் திருச்சி தொழிலதிபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
ஜம்மு-காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பலியானார். அவரது உடல் நேற்று முன் தினம் தனிவிமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ராணுவ உயர் அதிகாரிகள் திரண்டிருந்தனர்.
விமான நிலையத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் குவிந்திருந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தான் முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும். மற்றவர்கள் ராணுவ வீரர் வீட்டுக்கு சென்று தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.
இதற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.வீரமரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்தலாம் என்று கூறி அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். பின்னர் அமைச்சர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் கார் மீது செருப்பை வீசினர்.
இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் குறித்து கண்டறிந்தனர். இதுசம்பந்தமாக திருச்சியின் பிரபல தொழிலதிபரும் இவரோடு உறையூர் கோபிநாத், எஸ்.ஆர்.கோபிநாத் ஆகிய 3 பேரும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீடு வரை சென்றதன் அடிப்படையிலும், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத்தொடர்ந்து பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துறை குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, முகமது யாகூப் மற்றும் 3 பெண்கள் உள்பட 7 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7 பேருக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.