சென்னையை அடுத்த நொலம்பூரில் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணத்தில் 12 லட்சம் ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து, தனது 13 வயது மகனிடம் விசாரித்த பிறகு காவல்துறையில் தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நண்பர்களுடன் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்காக கடந்த ஒரு வருட காலமாக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாயை தொழிலதிபரின் மகன் தொடர்ச்சியாக திருடி வந்துள்ள நிலையில், பணம் குறைந்திருப்பதை அறிந்து மகனிடம் தொழிலதிபர் விசாரித்துள்ளார். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்காக பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, நொலம்பூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளித்தார். அவரது புகாரில், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனும், அவரது மூன்று நண்பர்களும் அருகில் உள்ள கேம் ஷோரூமில் ஃப்ரீ ஃபயர் என்ற ஆன்லைன் விளையாட்டை தவறாமல் விளையாடி உள்ளதாகவும், தொடர்ந்து விளையாட அனுமதிக்க ஃப்ரீ ஃப்யர் அக்கவுண்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிலையத்தில் ஊழியர்கள் தெரிவித்ததன் பேரில் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் பெரிய தொகை காணமல் போக, மகனிடம் விசாரித்தப் பின், ஒரு வருடத்திற்கு மேல் பணத்தை தனது மகன் திருடியது தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தொழிலதிபரின் மகன், அவரது நண்பர்கள் மற்றும் கேம் ஷோரூம் உரிமையாளர்கள் என பலரிடமும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஜே.ஜே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு மீண்டும் தொழிலதிபரின் மகனிடம் விசாரணை நடத்தியதுடன், இந்த வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என சோதிக்க அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”