மலைகளுக்கு நடுவே இடம்பெயரும் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள்! தென்னிந்தியாவில் இது ஓர் இயற்கை அதிசயம்!

அண்டை மாநிலமான கேரளத்தில் வனத்துறையினர் பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்துகின்றனர்.

தென்னிந்தியாவில் நிகழும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே பயணிக்கும். இதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது.

ஒவ்வொரு வருடம் இந்த பட்டாம்பூச்சிகளின் இடம் பெயர்தலை கணக்கெடுக்க, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதிகளில் இருந்து பலரும் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில், ஆகஸ்ட் மாதமே பட்டாம்பூச்சிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை நோக்கி இடம் பெயர துவங்கிவிட்டன. இந்த இடப்பெயர்வு பொதுவாக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலேயே நடைபெறும்.

பட்டாம்பூச்சி இடம்பெயர்வுகளும் பருவமழையும்

இந்த துறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட பலரும் முன்வைக்கும் காரணம் பருவமழை தான். தென்மேற்கு பருவமழை இந்தியாவில், கேரளத்தில்  இருந்து தான் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படும். பருவமழை ஆரம்பத்திற்கான அறிகுறிகள் தென்படவும், கடும் மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகளில் தஞ்சம் அடைகிறது. ”நீலம்பூர், பாலக்காடு கணவாய் வழியாக இந்த பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வை, குழு உறுப்பினர்கள் கண்டு கூறினால், அந்த பட்டாம்பூச்சிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகளை அடைந்துவிட்டதா என்பதை அறிய அப்பகுதியில் தன்னார்வலர்கள் இருப்பதுண்டு” என்று கூறுகிறார் ஜெஸ்வின்.

”தேன் தரும் தாவரங்களின் எண்ணிக்கை (Butterfly Nectar food plants) மற்றும் தேவையின் அடிப்படையில் அவைகளின் இடம் பெயர்வு அமைந்துள்ளது. பருவமழை பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், பட்டாம்பூச்சி இடம்பெயர்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.  கடந்த ஆண்டு பருவமழை மிகவும் தாமதமாகவே ஆரம்பித்தது. எனவே இடம்பெயர்வும் தாமதமாகவே ஆரம்பித்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, இம்முறை, பருவமழை விரைவிலேயே முடிந்த காரணத்தால், பருவமழைக்கு பிந்தைய பட்டாம்பூச்சி இடம்பெயர்வும் சீக்கிரமாக நிகழ்ந்தது” என்று கூறினார் அவர். கன்ஹா புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கிப்லிங் கேம்பின் ஹெட் நேச்சுரலிஸ்ட்டாக பணியாற்றுகிறார் ஜெஸ்வின் கிங்ஸ்லி.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் நோக்கிய நீண்ட பயணம்

Pre-monsoon migration, post-monsoon migration பருவமழைக்கு முந்தைய இடம் பெயர்வும், பருவமழைக்கு பிந்தைய இடம் பெயர்வும் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்ததாகவே இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, சேர்வராயன் மலை (ஏற்காடு), கொல்லி மலை, பச்சை மலை, மற்றும் கல்வராயன் மலைகளை நோக்கி சீராக பயணிக்கின்றது இந்த பட்டாம்பூச்சிகள். பருவமழை முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் பிற்பாதியில் மீண்டும் சேலம், ஈரோடு , திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற தமிழக பகுதிகளிலும், பாலக்காடு கணவாய் வழியாக கேரளாவில் உள்ள வயநாடுக்கும், கர்நாடகாவில் மைசூரு, பெங்களூரு, கோலார், கூர்க் ஆகிய பகுதிகளுக்கும் பயணிக்கும். இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய இடம் பெயர்தலின் போது அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரு மணி நேரத்திற்கு 1,060 பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நம் பகுதிகளில் நாம் தினமும் காக்கும் பட்டாம்பூச்சிகள் அனைத்தும் இடம்பெயர்வதில்லை.

இந்த ஆண்டு அதிகம் இடம் பெயர்ந்தது எவ்வகை?

டார்க் ப்ளூ டைகர்ஸ் (Dark Blue Tiger), ப்ளூ டைகர்ஸ் (Blue Tiger), ப்ளைன் டைகர்ஸ் (Plain Tigers), ஸ்ட்ரைப்ட் டைகர்ஸ் (Striped tiger) ஆகியவை இம்முறை அதிக அளவில் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம் பெயர்ந்து வந்தன. 10 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச கணக்கில் பட்டாம்பூச்சிகள் திரும்பி வந்தன. கல்லாறு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இப்படி பட்டாம்பூச்சிகள் திரும்பி வருவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பருவமழைக்கு முந்தைய இடம்பெயர்வில் அதிக அளவு எமிக்ரெண்ட்  (Emigrant butterfly)  வகை அதிகமாக இடம் பெயர்ந்தது.

குறிப்பிடத்தக்க வகையில் க்றிம்ஸன் ரோஸ் (Crimson Rose) என்ற பட்டாம்பூச்சிகள், கோத்தகிரி பள்ளத்தாக்கில் இருந்து  பவானி சாகர் அணையை தாண்டி, சிறுமுகை நோக்கி பயணித்தது. இந்த பகுதியில் க்றிம்சன் ரோஸ் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைப்பது மிகவும் அதிசயமான ஒன்று.

பட்டாம்பூச்சிகள் சர்வேயும் டி.என்.பி.எஸ் அமைப்பும்

பட்டர்ஃப்ளை மைக்ரேசன் ஆஃப் இந்தியா (Butterfly Migration of India)  என்ற வாட்ஸ்ஆப் குழு மூலமாக தென்னிந்தியாவில் இருக்கும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் இணைக்கப்படுகின்றனர்.  தி நேச்சர் அண்ட் பட்டர்ஃப்ளைஸ் என்ற அமைப்பு கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. ”ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இருந்து பட்டாம்பூச்சிகள் இடம் பெயர் துவங்கினால் அதனை, ஒரு நிமிடத்திற்கு எத்தனை பறக்கின்றன என்பதை கணக்கிட்டு அடுத்த ஜோனுக்கு தகவல்கள் அளிக்கப்படும். இவ்வாறு ஆரம்பம் முதல் இறுதி வரையில் பட்டாம்பூச்சிகள் எவ்வளவு நகர்கிறது என்பது  கணக்கிடப்படுகிறது” என்று கூறினார் ஜெஸ்வின்.

ஒவ்வொரு பகுதிகளிலும் வன உயிரினங்களை கண்காணிக்க சிறு சிறு குழுக்கள் இயங்கி வருகிறது. அவை அனைத்தையும் ஒன்றிணைத்து பெரிய வகையில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ், அனைத்து வனத்துறை கோட்டங்களுடன் இணைந்து இந்த கணக்கெடுப்பினை நடத்துகிறது. இந்த இடம் பெயர்வு மட்டுமல்லாமல், எந்த பகுதிகளில் எவ்வகையான பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்பது முதல் முழுமையான  தரவுகளை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்று கூறுகிறார் ஜெஸ்வின்.

நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தில் வனத்துறையினர் பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்துகின்றனர். தும்பி, தவளை, பாம்புகள், பட்டாம்பூச்சி என்று ஆர்வமாக அங்கே கணக்கெடுப்புகள் நடைபெறுகிறது. தமிழகத்திலும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் வனவிலங்குகள் குறித்த ஒரு ஆர்வம் மக்களுக்கு ஏற்படும். இந்த முறை ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 135 பறவைகள் மற்றும் 118 பட்டாம்பூச்சிகள் இனம் கண்டறியப்பட்டது. இது போன்று தொடந்து பல்வேறு உயிரினங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Butterfly migrations between western and eastern ghats of south india

Next Story
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவுkallakurichi aiadmk mla prabhu, Chennai high court ordered to produce prabhu mla wife soundarya, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அதிமுக எம்எல்ஏ பிரபு காதல் திருமணம், எம்எல்ஏ பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு, prabhu mla married brahmin woman, aiadmk mla prabhu, prabhu mla love marriage, mla prabhu wife soundarya, சென்னை உயர் நீதிமன்றம், chennai high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express