by election vikravani round up : தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கி விட்டது. இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெரிதும் நம்பியுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியும், ஆளுங்கட்சியும் தெளிவான வியூகத்தை கையாண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி, பிரச்சாரம், மக்களை நேரடியாக சந்திப்பது என 2 கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி:
விக்கிரவாண்டி தொகுதியில் 2016 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற திமுக ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானர். இவரின் மறைவுக்கு பின்னர் இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராதாமணி திமுக புள்ளி பொன்முடியின் நெருக்கம். அப்போதைய தேர்தலில் அவர் வேட்பாளராக நிற்க வைக்க பரிந்துரை செய்ததே பொன்முடி தான். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனர் ராதாமணி.
அதே போல் இந்த முறையும் பொன்முடியின் நெருக்கமான நா.புகழேந்திக்கு அறிவாலயம் சீட் ஒதுக்கியுள்ளது. புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார்.அதுமட்டுமில்லை ஊராட்சி மன்ற தலைவராகவும்,ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் புகழேந்தியின் சொந்த ஊர் விக்கிரவாண்டி இல்லை. இங்கு இவருக்கும், இவரின் நெருங்கிய நண்பர் மறைந்த ராதாமணிக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு,மற்றும் ஆதரவாளர்களை பார்த்து சீட்டு வழங்கப்பட்டுள்ளது.புகழேந்தியை ஜெயிக்க வைக்க பொன்முடி தீவிரம் காட்டி வருகிறார்.
மற்ற தொகுதிகளை விட ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியச் செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு இவர் 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரின் சொந்த ஊர் இதே விக்கிரவாண்டி தான். இவருக்கும் இந்த தொகுதியில் ஆள் பலம், பண பலம் அதிகம். அதையும் தாண்டி கட்சிக்காக நிறைய உழைத்தவர் என்ற பெயரும் உண்டு.
இங்கு வன்னியர் சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால் பாமக அதிமுவுக்கு ஆதரவு தந்திருக்கும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அதிமுக- திமுகவுக்கு மிகப் பெரிய போட்டியாக இருப்பதாக கூறியுள்ளனர். விக்கிரவாண்டியில் திமுகவுக்கு தனி வரலாறும் உண்டு.
கருத்துக்கணிப்பு:
இந்த 2 தொகுதிகளில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு 2 வாரங்களுக்கு முன்பு வேறமாதிரியாக இருந்த நிலையில் இப்போது எடப்பாடிக்கு சற்றும் கோபத்தை வரவைக்கும் வகையில் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு காரணம், ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பான வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, ஏ.ஜி.க்கு மணிமண்டபம் போன்றவை. விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் இந்த தகவலை முதல்வரிடம் பகிர்ந்துள்ளனர். இதனால் கடுப்பான எடப்பாடி, கட்சி நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர்களுக்கு சில அறிவுரைகளை கூறி செயலில் இறங்க சொல்லி இருக்கிறார்.
இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பாஜகவிடம் தங்களது கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளனர்.