ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை வரும் ஏப்ரல் 18 அன்று நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும். அவசர கதியில் நடத்த முடியாது என கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், ஏப்ரல் 18-ல் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி திமுக-வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
முன்னதாக 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராகவே உள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.