பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கருக்கான சி.ஏ. தேர்வுகள் நடைபெற உள்ள தேதியும் வருகிறது. இந்நிலையில் இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதோடு பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவிற்கு ‘தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசு!! தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது ஒன்றிய அரசு!! தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா?’ என்று கருத்து வந்திருந்தது.
இதனை மேற்கோள் காட்டி பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா, ‘சி.ஏ தேர்வுகளுக்கான தேதிகள் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர நிதியமைச்சகத்தால் அல்ல’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பொங்கல் அன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ தேர்வு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யாவின் பதிவை மேற்கோள் காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்’ என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“