மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் இதில் முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை.
இதனால், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,
”பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.
அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது.
இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“