சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கொண்டுவர வேண்டிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும்.
தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், துறைவாரிய அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
ஆகவே இந்தக் கூட்டத் தொடரில் இது பற்றி விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்படலாம்.
மேலும் அதிமுகவில் எதிர்க்கட்சி அந்தஸ்து ஓ.பி.எஸ், அணிக்கு வழங்கப்படுமா அல்லது எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்கப்படுமா என்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒருவர் அருகில் ஒருவர் உட்காரமாட்டோம் என்றெல்லாம் அவையில் பேச முடியாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil