தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களைத் உருவாக்க ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி செலவழிக்கப்படும் எனவும் 36 மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. சென்னை செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அதுபோல், திருவாரூர் மாவட்டம் நீலாகுடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009-ன் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க மத்திய அமைச்சரவை ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 36 மாதத்திற்குள் தமிழ்நாடு, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மத்தியப் பல்கலைக்கழகமும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களும் புதிதாகத் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.