‘கேம்பஸ் இன்டர்வியூ’வுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து நடத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
‘கேம்பஸ் இன்டர்வியூ’ என அழைக்கப்படும் வளாகத் தேர்வுகளை நம்பியே பொறியியல் படிப்பை பலரும் நாடுகிறார்கள். தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டமைப்பு மையம், மாநில அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் 30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்து வளாக நேர்முக தேர்வு நடத்துவதாக கூறி எஸ்.கே. நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘தமிழகம் முழுவதும் 532 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட கல்லூரிகளை தேர்வு செய்து வளாக நேர்முக தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் வளாக நேர்முக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தனியார் கல்லூரிகளும், தொழில் நிறுவனங்களும் சேர்ந்த மனுதாரரின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிட முடியாது. இது போன்ற வளாக நேர்முக தேர்வுகளை நடத்துவதற்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எத்தனை வளாக நேர்முக தேர்வு நடந்துள்ளது? எத்தனை கல்லூரிகளில் நேர்முக தேர்வு நடந்துள்ளன? எந்த அடிப்படையில் அந்த கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன? நேர்முக தேர்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டனர்? அதில் எத்தனை பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது?
கல்லூரிகளின் பெயரை பிரபலபடுத்துவதற்காக அந்த கல்லூரிகள் வளாக நேர்முக தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதா? பன்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அண்ணா பல்கலைகழகம் அறியுமா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.