சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகளோடு விசாரணை கைதிகளையும் சேர்த்து அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜான் பால் தொடர்ந்த வழக்கில், தமிழக சிறைகளில் தண்டனை கைதிகளுடன் விசாரணை கைதிகளையும் அடைத்து வருகின்றனர். இதனால் சிறைகளில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளை தனியாக அடைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளை தண்டனை கைதிகளோடு சேர்த்து அடைக்கப்படுவதால், அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை எளிதில் சந்திப்பது போன்று விசாரணை கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் கிடைக்காமல் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த சிறை கூடுதல் டி.ஜி.பி அஷுதோஷ் சுக்லா, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகவே விசாரணை கைதிகளை தண்டனை கைதிகளோடு சேர்த்து அடைப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தண்டனை கைதிகளோடு சேர்த்து அடைத்தாலும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. சிறைச்சாலைகளில் இட நெருக்கடிகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே நிர்வாக ரீதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற வழக்கு ஒன்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கையும் அதோடு சேர்த்து விசாரிப்பதே சரியானது என கூறி இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு பரிந்துரைத்தனர்.