கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து ஜனவரி 8 ஆம் தேதி வெளியான தினமணி கட்டுரையில் கவிஞர் வைரமுத்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாக புகார் எழுந்தது. இதனையடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. வைரமுத்து கட்டுரைக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜீயர், மீண்டும் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்திப் பேசியதுடன், ஆண்டாள் தொடர்பாக கொளத்தூரில் நடத்தத் திட்டமிட்டுள்ள விவாதம் குறித்துப் பேசினார். அப்போது, கொளத்தூரில் மட்டுமல்ல உலகத்தில் எந்த ஊரிலும், எந்தக் கடவுளையும் ரோட்டோரத்தில் மேடை போட்டு பேசக்கூடாது என்று கூறிய அவர், சாமியார்களெல்லாம் இவ்வளவு நாள் சும்மா இருந்ததாகவும், எங்களாலும் கல்வீசவும், சோடாபாட்டில் வீசவும் தெரியும் என்றார்.
ஜீயரின் எந்த பேச்சு வன்முறையை தூண்டுகின்றது வகையில் இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஜீயர் இந்த பேச்சு இரு தரப்பினர் இடையே வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்தேன். இதுவரை நான் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே எனது புகார் மீது ஜீயர் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் வரும் 20 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.