சரவணக்குமார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தஞ்சை, அரவகுறிச்சி, திருபரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குமாறு ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார். இது அப்போதே சர்சையை கிளப்பியது.
அந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றார்கள். திருபரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார், ஏ.கே.போஸ். இந்த வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கைரேகை வைக்கவில்லை என்பது சரவணனின் வாதம். ஜெயல்லிதா உயிரோடு இருந்த போது பெங்களூரு சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட கைரேகை விபரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனில் ஒப்படைக்கப்பட்ட கைரேகையையும், சிறையில் எடுக்கப்பட்ட கைரேகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணையிலும் இந்த விவகாரம் முன் வைத்துள்ளார், சரவணன். விசாரணை கமிஷனும் இது குறித்து விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நீதிமன்றத்தில் எழுப்பியுள்ள கேள்விகளான, கைராகையை வைத்து அது உயிரோடு இருந்த போது எடுத்ததா? இறந்த பின்னர் எடுக்கப்பட்டதா? என்பதை கண்டுபிடிக்க முடியுமா? கைரேகையை எப்படி எடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் குறித்து, காவல்துறையின் கைரேகை பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் வரதராஜிடம் கேட்டோம்.
“உயிரோடு உள்ள ஒருவரிடம் எடுக்கப்பட்ட ரேகைக்கும் இறந்துபோன பின்பு எடுக்கப்பட்ட ரேகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். உயிர் உள்ளபொழுது விரலில் இருக்கும் ரத்த நாளங்கள் திறந்திருக்கும். இறந்து ஆறு மணி நேரத்தில் அவை மூடிவிடும். இதைவைத்து நாங்கள் கண்டுபிடிப்போம். அனால் இந்த அறிவியல், உலகம் முழுவதும் பெரிதாக வெற்றி பெறவில்லை. காரணம் இறந்து ஆறு மணி நேரம் வரை பெறப்படும் ரேகையை, உயிரோடு இருந்த நேரத்தில் பெறப்பட்டது போலவே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவரிடம் கைரேகை பெறுவதற்கு நிறைய நடைமுறைகள் இருக்கிறது. இதற்கென தனிப்பட்ட இங்க், ரோலர், ப்ளேட் எல்லாம் காவல்துறையிடம் உள்ளது. இதன் மூலமாகத்தான் கைரேகை பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் ஸ்டாம்ப் பேடு இங்க்-கை உபயோகப்படுத்தி, காவல்துறையினர் யாரும் இல்லாத நிலையில் ஒரு டாக்டரை வைத்து ரேகை வாங்கி இருக்கிறார்கள். அந்த ரேகை தெளிவாகவும் இல்லை. இதை வைத்து எதையும் கண்டுபிடிக்கவே முடியாது. எனக்கு தெரிந்தவரை அந்த அம்மாவின் கைரேகை பெரியதாக இருக்கும். இதில் இருக்கும் ரேகையோ சிறியதாக உள்ளது. இப்படித்தான் இருக்கவேண்டும் என இது திட்டமிடப்பட்டே எடுக்கப்பட்டதா? இல்லை மெத்தனமாக எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவுங்களுடைய கைரேகை தானா அது என்பதே சந்தேகமாக இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் வெளியிடப்போகும் தீர்ப்பு, தமிழகத்தில் நிச்சயம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.