உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது : ஐகோர்ட் கருத்து

உள்ளாட்சி தேர்தலை காலவரம்பின்றி தள்ளிவைப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை காலவரம்பின்றி தள்ளிவைப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளை தங்கள் முன் விசாரணைக்கு பட்டியலிட அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்வது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், அந்த வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடையாக இல்லை எனவும் வேண்டுமென்றே தேர்தலை தள்ளி போடுகிறார்கள் என பாடம் நாராயணன் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது, காலவரம்பின்றி தேர்தலை தள்ளிவைப்பது ஏற்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி, எல்லை மறுவரையறை தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்கலாமா என விளக்கம் பெற்று தெரிவிக்க திமுக தரப்புக்கும், தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

×Close
×Close