ரேக்ளா ரேஸ்க்கு தடை விதிக்க முடியாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ரேக்ளா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

rekla race. 1

தமிழகத்தில் ரேக்ளா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இதுதொடர்பாக, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வீடியோ ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசானது, கடந்த 2014ம் ஆண்டில், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில்,
ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், இச்சட்டம் சரியானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு, மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த தடை நீங்கியது.

இருப்பினும், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. அதேநேரத்தில், ரேக்ளா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தில், ரேக்ளா ரேசுக்கு தடை நீக்கப்பட வில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு, வடமாடு, எருதுவிரட்டு , மஞ்சுவிரட்டு ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாடுகளை கடுமையாக துன்புறுத்தப்படும் வகையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போன்று, இந்த விளையாட்டு, கலாச்சாரத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விளையாட்டு கிடையாது. ரேக்ளா ரேசில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது. இது, மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்பு திருத்த சட்டத்துக்கு எதிரானது. குறிப்பாக , மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ் விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு அனுமதிப்பது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது .

இதுகுறித்து தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். எனது கோரிக்கை குறித்து மாநில கால்நடை பராமரிப்பு துறை கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக, மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் பதில் தெரிவித்தார். ஆனால், ரேக்ளா ரேசுக்கு தடை விதிக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, எந்த அமைப்புக்கும், ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் ரேக்ளா ரேஸ் எனும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமானது, மாடுகள் தொடர்புடைய அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மேலும், மத்திய அரசு, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம்தான் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்தது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை தான் அனுக வேண்டும். இந்த விசயத்தில், உயர நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இருக்கும் நிலையில், உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆகவே , மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். இந்த மனு மீதான விசாரணையை முடித்து வைக்கிறோம் என்று கூறி, உத்தரவிட்டனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Can not ban rakla race chennai high court order

Next Story
மருத்துவ படிப்பு சேர்க்கை: தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு அநீதி – உயர்நீதிமன்றம் வேதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com